செயலுக்கான அழைப்பு

இந்த ‘செயலுக்கான அழைப்பு ‘ என்பது உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மே நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும். இதில் பரிந்துரைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் hashtag #1world1struggle என்பவையும் அடக்கம். இந்த அழைப்பு இந்த ஒருங்கிணைப்புக்கு ஒரு பொதுவான உள்ளடக்கத்தை வழங்குகிறது. நமது செயல்பாடுகள் குறித்து அனைத்துலக அளவில் கொண்டு செல்ல இந்த குறியீடுகள்,hashtag போன்றவை பயன்படும்.

இந்த கண்டம் கடந்த மே நாள் அழைப்பில் இணைந்து கொள்ளவும்,இந்த முயற்சியின் ஆதரவாளராக இணையவும் மே நாள் 2017 மின்னஞ்சல் குழு என்ற இணைப்பை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டத்தையும் கீழே பதிவிடலாம்.

கண்டங்களுக்கிடையேயான மே நாள் 2017
1 மே , 2017

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தெருக்களுக்கு வந்து மே 1 ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை நினைவுகூரும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சர்வதேச மாணவர் இயக்கம் (ISM) என்ற தளத்தின் ஊடாக, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் குழுவினர் நடத்திய பல கூட்டங்களின் விளைவாக பின்வரும் அழைப்பை விடுக்கின்றோம். உலகெங்கும் களப்பணியாற்றிவரும் குழுக்கள்,தொழிற்சங்கங்கள், புதிய முன்முயற்சிகளை மேற்கொள்பவர்கள் என அனைவரின் மே நாள் செயல்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஒரு உலகளாவிய பார்வையை கொடுக்க விரும்புகிறோம்.

நமது வாழ்விடங்களைத் தாண்டி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களாக நாம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும், ஏனென்றால் நாம் அனைவரும் இலாப நோக்கம் கொண்ட நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் சரிவு, அயலாக்கம்(outsourcing), குறைந்து வரும் கூலி/ஊதியம், தனியார்மயமாக்கல், அதிகரித்து வரும் வாழ்வாதாரச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் இவை அனைத்தும் உலக முதலாளித்துவப் பொருளாதார அமைப்புடன் நேரடியாக தொடர்புடைய அறிகுறிகளாகும். சுரண்டலையும் போட்டியையும் அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு முறை நமது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் வணிக மயமாக்குகிறது.

பணியிடமாக இருந்தாலும், கல்வி நிலையங்களாக இருந்தாலும் அதிகரித்து வரும் செயல்திறன் பற்றிய அழுத்தம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக குழந்தை மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த அழுத்தம் அதிகரித்து வருகின்றது. சந்தைப் பொருளாதாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தேசிய அரசு கட்டமைப்புகள், மக்களின் சுதந்திர சிந்தனைகளை வளர்த்தெடுப்பதை விட, குழுவோடு ஒத்துப்போதல், போட்டித்திறன் மற்றும் மதிப்பு-சேர்க்கப்பட்ட உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது. “நமது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாக” தூண்டப்பட்டு நாம் கல்விக் கடன்களை சேர்த்துக்கொண்டே போகிறோம். இந்த பெரும் கடன் சுமையை நாம் பெறப்போகும் அறிவு,திறன்கள் உள்ளிட்ட தனிமனித மூலதனத்தையும், கூட்டு செயல்பாட்டை கற்றுத்தரும் மனித உறவுகள்,சமூக விழுமியங்கள் உள்ளிட்ட சமூக மூலதனத்தையும் உழைப்பு சந்தையில் விற்பதன் மூலம் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய அமைப்பு முறை முதலாளித்துவ அமைப்புக்கு பொருந்தக்கூடிய எல்லைகளுக்குள்ளேயே நமக்கான கல்வியை கற்பிக்கின்றது. மாறாக, நமக்கு ஒரு திறந்த மற்றும் அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். மேலும், இது எந்த விதமான சமூக பொருளாதார அடிப்படையிலும் பாகுபாடற்ற ஒரு கல்வியாக இருக்க வேண்டும்.நாம் வெறுமனே ஒரு இடையூறு செய்ய முற்படவில்லை , மாறாக இவ்வமைப்பையே தகர்க்க விழைகிறோம்.

முதலாளித்துவத்தின் தேசங்கள் கடந்த அதன் இயல்பை பார்க்கிற போது, உலகளவிலான தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பு எவ்வளவு பொருத்தமானதோ அதே அளவு பொருத்தமானது மாணவர்களின் இணைப்பும். எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வட்டத்தில் ஒன்றிணைவதன் மூலம், நமது உள்ளூர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பன்னாட்டு பொருளாதார அமைப்பு முறையை இனங்காணலாம். மேலும், அது ஆபத்தான பணி நிலைமைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தின் புதிய சாத்தியக் கூறுகளையும் சக்தியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. ஒரே மதிப்பு கூட்டப்பட்ட சங்கிலிக்குள் ஐக்கியப்படுவதன் மூலம், தொழிலாளர்களின் கூட்டு பேர வலிமை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, தென் ஆப்பிரிக்காவின் மரிக்கானாவில் வேலை நிறுத்தம் செய்த சுரங்கத் தொழிலாளர்களும், ஜெர்மனியின் BASF இரசாயன ஆலைத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். அந்த சுரங்கத்தின் உற்பத்தியில் பெருமளவு கொள்முதல் செய்வது BASF என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இப்படிப்பட்ட தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்திருக்குமேயானால், 2012 மரிக்கனா படுகொலை சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மே நாள் 2017 மூலம், நமது கூட்டு இலக்காக ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அடைய விழைகிறோம். உலகளவில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையை கட்டமைப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். தேசியவாத மற்றும் இனவெறி போக்குகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் பொதுவான போராட்டத்தை வலியுறுத்தி நாம் ஒருவருக்கொருவர் கைகோர்த்து நிற்க வேண்டியதையும் , நம்மை நமக்கெதிராக திரித்து காட்டும் சக்திகளை எதிர்க்கவும் வலியுறுத்துகிறோம்.

எல்லைகளைக் கடந்து, அனைவருக்குமான நல்வாழ்க்கைக்காக !

#1world1struggle

Leave a Reply